சென்னை:
சையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி கோடம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

இசைஞானி என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஏராளமானோர் தங்கள் வாழ்த்துகளை நேரிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

தனது இல்லத்திற்கு வந்த முதலமைச்சரை பொன்னாடை போர்த்தி இளையராஜா வரவேற்றார். இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர். அவர்களும் தங்கள் வாழ்த்துகளை இளையராஜாவுக்கு தெரிவித்தனர். ஏராளமான ரசிகர்களும் வரிசையில் காத்திருந்து இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக இளையராஜாவுக்கு ட்விட்டர் வாயிலாக நடிகர் கமல்ஹாசன், பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அவர் தனது பதிவில், “திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்.” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.