டெல்லி: தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது மட்டுமே தீர்வு என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனாவின் 2வது அலை நாடு முழுவதும் உச்சம் பெற்று, தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229- பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கவலை அளிக்கும் விஷயமாக தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 289 ஆக உள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு என பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால், நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்த மோடி அரசு யோசித்து வருகிறது. தேவைப்படும் பட்சத்தில் முழு லாக்டவுன் அறிவிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கொரோனா பரவலை தடுக்க நாடு தழுவிய முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.
அவரது டிவிட்டில்,
மோடி தலைமையிலான பாஜக அரசின் செயலற்ற தன்மை பல அப்பாவி மக்களை கொல்கிறது.
கொரோனாவின் பரவலைத் தடுப்பதற்கான ஒரே வழி இப்போது ஒரு முழு பூட்டுதல்,
ஆனால்,பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் குறைந்தபட்ச வருமான உத்தரவாதத் திட்டமான ‘நியாய்’ (Nyay ) திட்டத்தின் பாதுகாப்போடு அதை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.