டெல்லி: உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற போர்த்திறஞ்சார்ந்த திட்டம் என  மத்தியஅரசை ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளில் விமானங்கள் மூலம் இந்திய மாணவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றன. உக்ரைன் மீது ரஷியா அணுஆயுத தாக்குதல் நடத்தலாம் என்பதால், தலைநகர் கிவ்வில் இருந்து இந்தியர்கள் உடனே வெளியேறும்படி தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ரஷிய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். இது இந்தியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியை அங்குள்ள தூதரகம் விரைந்து செய்து வருகிறது.

ஆபரேசன் கங்கா திட்டம் மூலம்  உக்ரைனிலிருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்கள் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நிலையில், உக்ரைன் நிலவரம் குறித்து டிவிட் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி,  உக்ரைனில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்த துயரச் செய்தி கிடைத்தது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நான் மீண்டும் வலியுறுத்துகிறேன், பாதுகாப்பான வெளியேற்றத்திற்கு மத்திய அரசுக்கு ஒரு மூலோபாய திட்டம் தேவை. ஒவ்வொரு நிமிடமும் விலைமதிப்பற்றது என தெரிவித்துள்ளார்.