டெல்லி:

கோட்சே தேசபக்தர் என்று பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது கோட்சே குறித்த கருத்துக்கு பாராளுமன்றத்தில் இன்று பகிரங்கமாக நிபந்தனையற்ற  மன்னிப்பு கோரினார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்புப் பாதுகாப்புக் குழு சட்டத்திருத்த மசோதா விவாதத்தின் போது, திமுக உறுப்பின் ராஜாவின் பேச்சின்போது குறுக்கிட்டு பேசிய மத்திய பிரதேசம்  போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரக்யா தாக்கூர், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தேச பக்தர் என்று புகழ்ந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாராளுமன்றம் நேற்று முதல் அமளிதுமளி பட்டு வருகிறது. பிரக்யா தாக்கூரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இருந்தாலும், எதிர்க்கட்சிகள் பிரக்யாவின் பேச்சுக்கு கண்டனமத் தெரிவித்து, அவர் மன்னிப்பு கேட்க வலியிறுத்தினர்.

இதையடுத்து, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பிரக்யா தாக்கூரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், நடப்பு கூட்டத்தொடரில் அவர் பங்கேற்க தடை விதிப்பதாகவும் தெரிவித்தார். அதுபோல, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், பிரக்யாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று பாராளுமன்ற அவைக்கு வந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர். கோட்சே குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரினார். கோட்சேவின் பெயரைக் குறிப்பிடாமல்  பேசிய அவர், ‘நான் தெரிவித்த கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்’ என்று கூறினார்.

அவரது மன்னிப்பை ஏற்ற மக்களவை, தொடர்ந்து சுமூகமாக நடைபெற்று வருகிறது.