சென்னை:

மிழகத்தில் அவ்வப்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில்,  காவிரி கோதாவிரி நதிகளை இணைக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதில், கர்நாடகம் மற்றும் தமிழகம் அதிக நீர் பங்கீடு கோரியுள்ளது தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க நதிகள் இணைப்பு திட்டம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி,  கோதாவரி – காவிரி நதி இணைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான வரைவு  திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. அதன்படி,  நதி இணைப்பு திட்டத்தின் செலவில், 90 சதவீதத்தை மத்திய அரசே மேற்கொள்ளும். 10 சதவீத தொகையை தான் சம்பந்தப்பட்ட மாநில அரசு மேற்கொள்ள வேண்டி இருக்கும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்தின் படி, தென் மாநிலங்களான கர்நாடகம், தமிழகம், ஆந்திரா, தெலுங்கான மாநிலங்களுக்கு தண்ணீர் பகிர்ந்தளிப்பது குறித்து  ஏற்கவே விவாதிக்கப்பட்டது. இதில், கர்நாடகா மற்றும் தமிழகம் தரப்பில் அதிக அளவிலான தண்ணீர் தேவை என கோரிக்கை வைத்துள்ளன.

தமிழகத்திற்கு 83 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்குவதாக திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில்,  தமிழகஅரசு சார்பில், 200 டிஎம்சி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அதுபோல, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களும் தங்களது பங்குக்கு தண்ணீர் தேவை குறித்து கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி பெறப்பட்டுள்ளது.  அதன்படி, காவிரி கோதாவிரி நதிகள் ஒன்றோடொன்று இணைக்கும் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) வரைவு குறித்து தமிழக அரசு தனது கருத்துக்களை 2019 செப்டம்பரில் தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கு (NWDA) சமர்ப்பித்திருந்தது.

கருத்துக்களில், தமிழக மக்களின் வளர்ந்து வரும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தமிழக எல்லை யில் நீர் இருப்பு திறனை குறைந்தபட்சம் 200 டி.எம்.சி.டி.க்கு அதிகரிக்க தமிழகம் NWDA ஐ கோரியுள்ளது.

மேலும்,  டிபிஆரின் படி, 247 டி.எம்.சி.டி தண்ணீரை கோதாவரி படுகையில் இருந்து கிருஷ்ணா நதிக்கு திருப்பிவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது, இதில் 163 டி.எம்.சி.டி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு ஒதுக்கப்படும். மீதமுள்ள நீர் தமிழகத்திற்கு வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் இந்த கோரிக்கைக்கு மற்ற மாநிலங்கள் அனுமதிக்குமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், காவிரி கோதாவிரி இணைப்பு திட்டத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

ஆனால், இந்த திட்டம் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில்,  இந்த திட்டத்தின்படி தமிழகத்தில் 200 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  தெரிவித்து வருகிறார்.   இதற்காக  60,000 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவும், இதை நிறைவேற்றப்பட்டதும்,  கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு, பாலாறு வழியாகக் காவிரிக்கு ஆண்டுதோறும் 200 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்குத் தடையின்றி கிடைக்கும். தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் முழுவதும் தீர்ந்துவிடும்  என்றும் கூறி வருவது குறிப்பிடத் தக்கது.