ஃபேர் ஹெவன், வெர்மவுண்ட், அமெரிக்கா

மெரிக்க நாட்டில் வெர்மவுண்ட் மாநிலத்தில் உள்ள ஃபேர் ஹெவன் என்னும் ஊரில் நடந்த தேர்தலில் ஒரு ஆடு தன்னுடன் போட்டியிட்ட நாயை தோற்கடித்து மேயர் பதவியை பிடித்துள்ளது.

அமெரிக்காவில் ஃபேர் ஹெவன் என்னும் சிறு நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் சுமார் 2500 பேருக்கு மேல் வசித்துவருகின்றனர். இந்நகரில் வெகு நாட்களாக மேயர் பதவி காலியாக உள்ளது. நகர மேலாளரான ஜோசப் கண்டர் மேயர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இவர் தனது நகரத்தில் ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க விரும்பி நிதி சேகரித்து வருகிறார்.

சமீபத்தில் மிச்சிகனில் உள்ள சிற்றூரான ஒமெனா என்னும் இடத்தில் ஒரு பூனை நகர அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. இதைக் கண்ட கண்டருக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது. காலியாக உள்ள மேயர் பதவிக்காக மிருகங்களை போட்டியிட வைத்து தேர்தல் நடத்தலாம் என அவர் தீர்மானித்தார்.

அதை ஒட்டி அந்த ஊரை சேர்ந்த சுமார் 15 பேர் தங்கள் செல்ல பிராணிகளை தேர்தலில் போட்டியிட வைத்தனர். இதற்காக ஒவ்வொருவரிடமும் இருந்து 5 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அந்த ஊர் கணித ஆசிரியர் வளர்த்து வந்த லிங்கன் என்னும் 3 வயது  ஆடு வெற்றி பெற்றுள்ளது.   இரண்டாவது இடத்தில் சம்மி என்னும் நாய் வந்துள்ளது.

கண்டர் எதிர்பார்த்தபடி இந்த தேர்தல் மூலம் நிதி கிடைக்கவில்லை. அவரால் சுமார் 10 டாலர்களுக்குள் தான் நிதி திரட்ட முடிந்துளது. ஆயினும் அவர் இந்த முயற்சி நிதியை சேகரித்து தரவில்லை எனினும் குழந்தைகள் மத்தியில் தேர்தல் குறித்த அறிவை உண்டாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.