பனாஜி: கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கோவாவில் மீண்டும் பொதுமுடக்கம் விதிக்கப்படாது என்று முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றின் பரவலுக்கு ஏற்ப மாநிலங்களே கட்டுப்பாடுகளை விதித்து கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந் நிலையில், கோவாவில் நாள்தோறும் 500க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளதாவது:
கோவாவில் கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. அனைவரும் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தற்போதைய சூழலில் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்த முடியாது. எனவே சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.