பஞ்சிம், கோவா
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கோவா தாதுச் சுரங்க பணிகள் நிறுத்தப்பட்டதால் அரசுக்கு வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோவா அரசுக்கு முக்கிய வருமானம் தாதுச் சுரங்கங்களில் இருந்து கிடைத்து வருகிறது. இந்த சுரங்கங்களின் ஒப்பந்தக் காலம் இந்த மாதம் 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த ஒப்பந்தங்கள் நீட்டிப்பில் சுற்றுப்புற சூழல் பாழாகும் என எழுந்த குற்றச்சாட்டை ஒட்டி உச்சநீதிமன்றம் ஒப்பந்தங்களை ரத்து செய்தன. அதனால் தாதுச் சுரங்கங்க ஒப்பந்த தாரர்கள் தங்கள் பணிகளை மார்ச் 15ஆம் தேதியுடன் முடித்துக் கொள்கின்றன.
புதிய சுற்றுச் சூழல் பாதுகாப்புக் கொள்கை உருவாக்கிய பின்னரே இந்த சுரங்கங்களுக்கான புதிய ஒப்பந்தங்கள் போட முடியும். அதன் பிறகே பணிகள் மீண்டும் தொடங்கும். இதனால் தற்போது அரசுக்கு சுமார் ரூ.3500 கோடி வருமான இழப்பு ஏற்பட உள்ளது. மேலும் மாநிலத்தில் சுமார் 70,000 பேர் வேலை வாய்ப்பை இழக்க உள்ளனர்.
இது குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் நிலேஷ் கப்ரால் டில்லிக்கு சுரங்க உரிமையாளர்களை டில்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர், “இது யாருடைய அரசு? அரசு எங்கே உள்ளது? ஒன்றுமே தெரியவில்லை. தற்போது புதிய ஏலம் விட்டு ஒப்பந்தங்கள் அளிக்கும் வரை பழைய ஒப்பந்த தாரர்களை சுரங்கப் பணியில் தொடர மத்திய அரசு தலையிட வேண்டும். ஏற்கனவே இது குறித்து முதல்வர் சிகிச்சைக்கு செல்லும் முன்பு உறுதி அளித்துள்ளார்.” என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கோவா அரசின் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்கிய குழு மத்திய கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோரை சந்தித்துள்ளனர். அப்போது மத்திய அமைச்சர்கள் கோவா மாநில அமைச்சரவை இது குறித்து விவாதம் நடத்தாததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவா சட்டமன்ற பாஜக உறுப்பினர் மைக்கேல் லோபோ, “முதல்வர் விரைவில் நலம் பெற்று தன் பணியை தொடர்வார். ஆனால் அதே நேரத்தில் இரண்டாம் கட்ட அமைச்சர் ஒருவரை தற்போது முதல்வர் பணிகளை கவனிக்க அமர்த்த வேண்டும். இதற்கான பணிகளில் கோவா அரசும் மத்திய அரசும் இணைந்து விரைவில் இறங்க வேண்டும். இதற்கிடையில் கோவா மாநிலத்தின் தாது சுரங்க பணிகள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து விரைவில் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கூறி உள்ளார்.