பனாஜி
கோவாவில் பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
கோவா மாநில தலை நகரில் நேற்று தூய்மை இந்தியா இயக்கத்தின் நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. அதில் கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது கோவா நகரின் சுத்தத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளப் போவதாக தெரிவித்தார்.
அவர் உரையில், “கோவாவில் பொது இடங்களில் மது அருந்துவது முற்றிலுமாக தடை செய்யப்பட உள்ளது. இது குறித்து அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தி இன்னும் 15 நாட்களில் பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்கப்பட்டது அறிவிக்கப்படும்.
சாலையோரங்களில் மதுவை அருந்தி விட்டு சாலையில் பாட்டில்களை உடைத்து போட்டு விடுகிறார்கள். அதனால் சுத்தமான சாலைகள் அசுத்தப் பட்டு விடுகின்றன. அத்துடன் பொதுமக்களுக்கும் இடைஞ்சலாக உள்ளது. இதை தவிர்க்க மதுக்கடை அருகில் மது பருகுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். அந்தக் கடையின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப் படும்.” எனக் கூறி உள்ளார்.
ஏற்கனவே கோவா மாநிலத்தில் கடற்கரை மற்றும் பல இடங்களில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.