பனாஜி
கோவா மாநிலத்தில் பாஜக அமைச்சர் பாலியல் புகார் காரணமாக ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் கோவாவும் ஒன்றாகும். இங்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பாஜக அமைச்சர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்து வருவதாகக் காங்கிரஸ் அறிவித்தது. மேலும் அவரை பாஜக நீக்காவிட்டால் அவரது பெயரை வெளியிடுவதாகவும் காங்கிரஸ் அறிவித்தது.
ஆனால் அதைப் பற்றி சிறிதும் கவலையின்றி பெயரை வெளியிடுமாறு பாஜக சவால் விட்டது. இதையொட்டி காங்கிரஸ் வெளியிட்ட தகவலின்படி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மிலிந்த் நாயக் பாலியல் தொல்லை தந்தது தெரிய வந்துள்ளது. தன்னுடைய அமைச்சர் பதவியை பயன்படுத்தி பீகாரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த தகவலை ஆதாரத்துடன் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.
காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர் அந்த பெண்ணுக்கும் அமைச்சர் மிலிந்த் நாயக் இடையே நடந்த வாட்ஸ் அப் உரையாடல் ஸ்கிரீன் ஷாட் மற்றும் ஆடியோ பதிவை வெளியிட்டார். இந்த ஆதாரங்கள் காவல்துறையில் அளிக்கப்பட்டு அமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதையொட்டி அமைச்சர் மிலிந்த் நாயக் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கோவா மாநிலத்தில் பாஜகவுக்கு வலுவாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் எனக் கூறப்படுகிறது. பாஜகவில் உள்ளவர்கள் மீது பாலியல் புகார்கள் எழுவது வழக்கம் என்றாலும் கோவா சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் இந்த புகார் வெளியானது மக்கள் மனதில் பாஜக மீது கடும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.