கேரளாவின் கொச்சியைச் சேர்ந்தவர் விஜயன் எர்ணாகுளத்தில் உள்ள கதிர்கடவு என்ற பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக டீ கடை நடத்தி வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவருவதை தனது விருப்பமாக வைத்திருந்த விஜயன் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

டீ கடை நடத்தி வரும் இவர் தனது மனைவி மோகனா-வுடன் கடந்த 14 ஆண்டுகளில் 25 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். இவரைப் பற்றிய செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது முதல் பிரபலமானார்.

2007 ம் ஆண்டு முதன் முதலில் எகிப்து நாட்டுக்கு சென்று வந்த இவர் கடைசியாக இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரஷ்யா சென்று வந்திருக்கிறார்.

தான் பார்த்த நாடுகளில் தனக்கு பிடித்த இடம் சிங்கப்பூர் தான் என்று கூறிய இவர், தனது பயண அனுபவங்களை புத்தகமாக தொகுத்து வெளியிட விரும்புவதாக கூறிவந்த இவருக்கு சிங்கப்பூரில் டீ கடை வைக்கவேண்டும் என்ற கனவு இருந்துள்ளது.

விஜயன் மற்றும் மோகனா தம்பதிகளின் வெளிநாட்டு பயணத்தை ஆதரித்த அவரது இரு மகள்கள் மற்றும் மருமகன்கள், அடுத்ததாக இவர்கள் ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்ததாக கூறுகிறார்கள்.