மொஹாலி, பஞ்சாப்
உலகமயமாக்கல் கொள்கை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறி உள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மொஹாலி நகரில் இந்திய வர்த்தக மேலாண்மை கல்வி நிறுவனங்கல் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இதில் பொருளாதார நிபுணரும் முன்னாள் இந்தியப் பிரதமருமான மன்மோகன் சிங் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
அந்த உரையில் மன்மோகன் சிங், “எதிர்கால இந்தியாவை கட்டமைக்கப் போவது வர்த்தக மேலாண்மைக் கல்வி நிறுவன மாணவர்கள் தான். அவர்களின் செயல்திறனும், அறிவாற்றலும் இந்தியாவை உலகப் பொருளாதாரத்தில் முதன்மை ஆக்கும் வல்லமை கொண்டவை. இந்தியா புதிய தொழில், உற்பத்தி மையங்கள் போன்றவைகளுக்கு வாய்ப்புகள் உள்ள நாடு.
சீனாவில் வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஏற்றுக் கொண்டதால் உலகமயமாக்கலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இங்கும் அதற்கான வாய்ப்புக்கள் தாராளமாக உள்ளன. ஆனால் உள்நாட்டு சிக்கல்களாலும், சில சவால்களாலும் நடைமுறைப் படுத்த முடியவில்லை. உலகமயமாக்கல் பரவலாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இந்தியாவும் இனி ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
உலகமயமாக்கல் கொள்கைகள் 1990களில் அறிமுகப்படுத்தப்பட்டு அந்த காலகட்டத்தில் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாக கூறப்பட்டது. ஆனால் சிலர் இந்த நடவடிக்கைகள் வெற்றி பெறாது எனவும் எதிர் வினைகளையே தரும் எனவும் கருத்து தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கருத்து தவறாகிப் போனது. உலகமயமாக்கல் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.
நமது நாட்டைப் பொருத்தவரை குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மூலமே வளர்ச்சியை அடைய வேண்டி உள்ளது. இதனால் புதிய முதலீடுகளை ஏற்றே ஆக வேண்டும். ஏற்கா விட்டால் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியாது. தற்போது உற்பத்தி தொழில்கள் அனைத்துமே தானியங்கி மயமாகி இருக்கிறது” என கூறி உள்ளார்.