சென்னை: காஞ்சிபுரத்தில் ரூ.640 கோடியில் கண்ணாடி தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம் வழங்கியது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில், ரூ.640 கோடியில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கச் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், அதற்கான அனுமதியை வழங்கியது.
இத்தொழிற்சாலையில் நவீன முறையில் முன்-கவர் கண்ணாடி (Front cover glass) தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள் மற்றும் மொபைல்போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்க பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகின்றன.
அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் இன்ஃப்ராகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தானது. இதைத்தொடர்ந்து, அந்த தொழிற்சாலை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வந்தன.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ. 640 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் சார்பில் அமைகக்ப்படும் இந்த தொழிற்சாலையில், நவீன முறையில் முன்-கவர் கண்ணாடிகளை தயாரிக்க உள்ளது. மேலும், , இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள், மொபைல் உற்பத்தியாளர்களுக்கு தேவையான கண்ணாடிகளை தயாரித்து வழங்கவும், அந்நிறுவனம் திட்டம் வகுத்துள்ளது.