மிகச் சமீபத்தில் த.மா.கா.வில் இருந்து அ.தி.மு.கவில் இணைந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனை, ராஜ்யசபா வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக.. ஜி.கே. வாசனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்.
‘சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது’ என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தீர்மானித்திருந்தார். அ.தி.மு.க.வின் இரண்டாம்கட்டத் தலைவர்களோடு தொகுதி பங்கீடு குறித்து பேசியும் வந்தார் ஜி.கே.வாசன். இதில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்.
பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில், “த.மா.காவுக்கு ஒன்பது இடங்கள்தான் தருவோம். அதோடு ஒரு ராஜ்யசபா சீட்டும் உண்டு. மேலும், உங்கள் கட்சி வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்” என்று அ.தி.மு.க. தரப்பில் சொல்லப்பட்ட.. ஆடிப்போய்விட்டார் வாசன்.
‘அப்படி போட்டியிட்டால் எங்கள் கட்சிக்கு என்று அங்கீகாரமே இல்லாமல் போய்விடும்” என்று மறுத்தார் வாசன்.
‘ஜி.கே.வாசனை எப்படியாவது உடன்பட வைத்துவிட வேண்டும்’ என்று த.மா.காவில் சிலர் கடுமையாக முயற்சித்தனர். அவர்களில் முக்கியமானவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்.
ஆனால், தே.மு.தி.க. – ம.ந.கூட்டணியோடு அணி சேர்ந்தார் வாசன். இதை எதிர்த்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
தேர்தல் முடிவு வாசனுக்கு சோகத்தை கொடுத்திருக்கும் நிலையில், அக் கட்சியின் மூத்த துணைத்தலவராக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனுக்கு ராஜ்யசபா வாய்ப்பை அளித்திருக்கிறார் ஜெயலலிதா.
கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே இப்படியொரு வாய்ப்பு எஸ்.ஆர்.பிக்கு கிடைக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
“தன்னை நம்பி வந்தவர்களை கைவிடமாட்டேன்” என்பதை இதன் மூலம் ஜி.கே. வாசனுக்கு ஜெயலலிதா புரிய வைத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல்வட்டாரத்தில்.
அதாவது, “ அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துக் கொண்டே, இன்னொரு புறம் ம.ந.கூட்டணி, பா.ஜ.க. ஆகியவற்றுடன் வாசன் பேச்சுவார்த்தை நடத்தியதை ஜெயலலிதா விரும்பவில்லை. ஆகவே த.மா.காவை விலக்கிவைத்தார்.
அதே நேரத்தில் த.மா.காவுக்கு ஒரு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்னதை இப்போது நிறைவேற்றிவிட்டார்” என்கிறார்கல் அ.தி.மு.க. தரப்பில்.
இந்த நிலையில் எஸ்.ஆர்.பியிடம் பேசினோம்.
நீங்கள் அதிமுகவில் இணைய காரணம் என்ன?
ஏற்கெனவே இதற்கு பலமுறை பதில் சொல்லிவிட்டேன். தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற மனநிலையே தமாகாவினரிடம் இருந்தது. இதை ஜி.கே.வாசன் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போதும், வேட்பாளர் நேர்காணலின்போது பங்கேற்ற 80 சதவீதம் பேர் வலியுறுத்தி கூறினார்கள். அதிமுகவுடன் கூட்டணி குறித்து வாசனே பேசி வந்தார். சில காரணங்களால் கூட்டணி சரியாக வராது என்றார். “ தொடர்ந்து பேசலாம் நல்ல முடிவு கிடைக்கும்” என்றோம்.
ஆனால் திடீரென நாள் திடீரென அதிகாலையில் மக்கள் நலக் கூட்டணிக்குச் செல்வதாக தொலைபேசியில் கூறினார்.
ஜி.கே.வாசன், விவேகம் இல்லாமல் நிதானம் இழந்து முடிவெடுத்துவிட்டார். ஆனாலும் அதிமுக தலைமையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகளை நான் மேற்கொண்டேன். அப்போது, கட்சியில் இணைந்து கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று கட்சியில் இணைந்துவிட்டேன்.
அதிமுகவில் ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?
எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. கட்சித்தலைமை சொல்வதை ஏற்று நடப்பேன். அவ்வளவுதான்.
அதிமுகவை தேர்ந்தெடுத்ததற்கு தனிப்பட்ட காரணம் உண்டா?
தனிப்பட்ட காரணம் என்று ஏதுமில்லை. மிழகத்தில் நல்லாட்சி ஏற்பட வேண்டும். வாரிசுகளைக் கொண்டாடாத, குடும்ப ஆதிக்கம் இல்லாத கட்சியின் ஆட்சி அமைய வேண்டும். இதற்காகவே அதிமுகவில் இணைந்தேன்.
மாநிலங்களவையில் தமிழகத்தின் எந்த பிரச்சினை குறித்து பேசப்போகிறீர்கள்..
அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவேன்.
த.மா.காவில் உங்களுக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து வைத்திருந்தார் வாசன். அவருக்கு நம்பகமாக இல்லாமல் அ.தி.மு.கவுக்கு வந்துவிட்டீர்கள் என்று ஒரு விமர்சனம் இருக்கிறதே..
யார் யாருக்கு உண்மையாக இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். வாசன்தான் எனக்கு உண்மையாக இல்லை.
– இவ்வாறு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் நம்மிடம் தெரிவித்தார்.