புதுடெல்லி:

ரம்ஜானையொட்டி இஃப்தார் விருந்து கொடுத்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.


ரம்ஜானையொட்டி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் பாட்னாவில் இன்று இஃப்தார் விருந்து கொடுத்தனர்.

இதனை விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ரம்ஜான் நோன்பு மாதத்தில் தாங்கள் அன்பை வெளிப்படுத்துவதாக காட்டிக் கொள்ளவே இருவரும் இஃப்தார் விருந்தை நடத்துகின்றனர் என்று கூறியிருந்தார்.

நமது மதத்துக்கும் சம்பிரதாயங்களுக்கும் பின்னே நிற்காமல், மற்றவர்களுக்காக ஏன் செயல்பட வேண்டும். இதேபோல் நவராத்திரி விழாவிலும்   இருவரும் விருந்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று கிரிராஜ் சிங் கூறியிருந்தார்.

இது குறித்து ஆளும் ஐக்கிய ஜனதா தள செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் கூறும்போது, கிரிராஜ் சிங்கின் கருத்து விரும்பத்தக்கதல்ல. அவர் மீது பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

வெறுப்பூட்டும் வகையில் பேசி வரும் பாஜக தலைவர்களை பிரதமர் நரேந்திரமோடி கட்டுப்படுத்தி வருகிறார். இந்த சூழலில் தேவையற்ற கருத்தை பதிவிட்ட கிரிராஜ் சிங் மீது பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கோரிக்கை விடுத்துள்ளது.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, பாஜக ஆகிய கட்சிகள் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.