ஸ்ரீநகர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மாநில கில்ஜித் பல்திஸ்தான் பகுதி ஆர்வலர் இந்திய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கோரி உள்ளார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள முக்கிய மோதலுக்கு காஷ்மீர் பகுதியே காரணம் ஆகும். சுதந்திரம் அடைந்த நாள் முதல் இதுவரை இந்த பிரச்சினை தொடர்ந்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்திருந்தாலும்  பாகிஸ்தான் தொடர்ந்து இங்கு தாக்குதல்கள் நடத்தி வருகிறது. கடந்த 1965 ஆம் வருடம் காஷ்மீரில் சில பகுதிகளைப் பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. இந்த பகுதி தற்போது பாகிஸ்தானின் ஆட்சியின் கீழ் உள்ளன.

நேற்று காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு எண் 370 மற்றும் 35 ஏ ஆகிய பிரிவுகளை விலக்கிய மத்திய அரசு காஷ்மீரை இரண்டாகப்  பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாமல் நேரடியாக மத்திய அரசின் கீழ் இயங்கும் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த் அறிவிப்பை நேற்று மத்திய அரசு வெளியிட்டது.

இந்த அறிவிப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் எவ்வாறு இந்தியாவின் பகுதியாக உள்ளதைப் போல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாகும் என அறிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு  பகுதியாக கில்ஜித் பல்திஸ்தான் உள்ளது. இந்த பகுதியின் ஆர்வலர் செங்கே எச் செரிங் ஆவார்.

அவர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அறிவிப்புக்குப் பதிலாக,“நாங்கள் கில்ஜித் பல்திஸ்தான் காஷ்மீரின் ஒரு பகுதி என்பதை ஒப்புக் கொள்கிறோம். நாங்கள் லடாக் பகுதியின் விரிவாக்கத்தில் வசித்து வருகிறோம். எனவே எங்களுக்கு இந்திய அரசியலமைப்பில் இடம் அளிக்க வேண்டும். அதாவது இந்திய மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்” எனக்கோரி உள்ளார்.