டெல்லி: டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியதாவது: பிரதமர் மோடி அரசானது 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். குடியரசு தினத்தில் நிகழ்ந்த கலவரத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறது.
செங்கோட்டை சம்பவமும், தேசியக் கொடிக்கு நிகழ்த்தப்பட்ட அவமதிப்பும், குடியரசுக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் ஏதிரானது. குடியரசு நாளன்று பிரதமர் மோடி கொடியேற்றி மரியாதை செலுத்திய அதே இடத்தில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதே தருணத்தில் விவசாயிகள் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகயை கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு எம்.பி. எவ்வாறு தேசத்துரோகியாக முடியும் என்று கூறினார்.