டெல்லி:

லக நாடுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாரம்பரிய மருத்துவமான  சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுர்வேதா நிபுணர்களும் கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுடிபிடிக்கலாம் என மத்திய  ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்தியா உள்பட 200க்கும் மேற்பட்ட நாடுகளை புரட்டியெடுத்து வருகிறது கொரோனா வைரஸ். கண்ணுக்கு தெரியாத இந்த நுண்ணுயிரியை அழிக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்பட முடிய வில்லை. உலகம் முழுவதும் 600 நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவ துறைகளிலும், கொரோனாவுக்கான மருந்து தயாரிக்கும் பணிகளை துரிதப்படுத்துங்கள் என்று  மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், அனுமதி  அளித்துள்ளது.

இந்த ஆராய்ச்சிக்கு, அறிவியல் ஆலோசனை அமைப்பிடம் இருந்து, முறையான அனுமதி பெற வேண்டும்; முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கான மருத்துவ பரிசோதனைகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதுடன்,  ஆயுஷ் அமைச்சகத்தின் பதிவு பெற்ற மருத்துவர், ஆராய்ச்சி பணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்றும்,  ஆராய்ச்சி பணிகளின் முன்னேற்றம் மற்றும் கால அளவுகள் குறித்த தகவல்கள், அவ்வப்போது, ஆயுஷ் அமைச்சகத்துக்கு தெரியப் படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.