ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பிரபல பாலிவுட் பாடகி நேஹா கக்கரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடினர்.

இரவு 7:30 மணிக்கு துவங்குவதாக இருந்த இந்த இசை நிகழ்ச்சிக்கு நேஹா கக்கர் குறித்த நேரத்துக்கு வராததால் நிகழ்ச்சி தாமதமானது.

இரவு 10 மணி வரை நேஹா கக்கர் அரங்குக்கு வராததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அவரை வசைபாட தொடங்கினர்.

சுமார் மூன்று மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்த நேஹா, “நீங்க ரொம்ப நேரமா காத்துகிட்டு இருக்கீங்க, என் வாழ்நாளில் நான் யாரையும் இதுவரை இப்படி காத்திருக்க வைத்ததில்லை.

என்ன நடக்குமோன்னு எனக்கு கவலையா இருந்தது, நீங்க உங்க விலைமதிப்பற்ற நேரத்தை எனக்காக செலவிட்டீர்கள்” என்று கண்ணீர் மல்க இந்தியில் பேசி தனது ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இருந்தபோதும், ஆத்திரம் அடங்காத ரசிகர்கள் நேஹாவை வெளியேறும்படி தொடர்ந்து கோஷம் எழுப்பியதுடன், “இது இந்தியா இல்ல. நீங்க ஆஸ்திரேலியாவுல இருக்கீங்க. போய் ரெஸ்ட் எடுங்க. ரெண்டு மணி நேரத்துக்கும் மேல காத்துட்டோம். ரொம்ப நல்ல நடிப்பு” என்று கூச்சலிட்டனர்.

இதனையடுத்து மேடையேறிய ஒரு மணி நேரத்தில் இசை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார் நேஹா கக்கர்.

இருந்தபோதும், ஆத்திரம் அடங்காத அவரது ரசிகர்கள் இந்த இசை நிகழ்ச்சியின் பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அவரை தொடர்ந்து வசை பாடி வருகின்றனர்.