திருவனந்தபுரம்:

கேரளாவில் 34 வயதான ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜசேகரன் நேற்று முன் தினம் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளிக்க முதல்வர் பினராய் விஜயன், போலீஸ் டிஜிபி லோக்நாத் பெக்ரா ஆகியோருக்கு கவர்னர் சதாசிவம் சம்மன் அனுப்பியிருந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் முதல்வர் பினராய் விஜயன் பாஜ, ஆர்எஸ்எஸ் தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பத்திரிக்கை, மீடியாக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த பேச்சுவார்த்தை நடந்த திருவனந்தபுரம் ஓட்டல் முன்பு கூடியிருந்த மீடியாக்கள், பத்திரிக்கையாளர்களை வெளியேற்ற உத்தரவிட்டதன் மூலம் பினராய் விஜயன் மீதிருந்த நல்ல அபிப்பிராயம் விலகி, பத்திரிக்கையாளர்களை அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சியடைந்த பத்திரிக்கையாளர்கள், பேச்சுவார்த்தை நடக்கும் கூட்ட அரங்கிற்குள் அனுமதி கிடையாது என்பதை முன்கூட்டியே ஏன் அறிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

பத்திரிக்கையாளர்கள் அவமதிப்பு செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் பதிலளிக்க மறுத்துவிட்டார். ‘‘ இது தொடர்பான எங்களது கேள்விக்கு அவர் பதிலளிக்காமல் புறக்கணித்துவிட்டார்’’ என்று ஒரு நிருபர் தெரிவித்தார்.

2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பாஜ மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன், ஆர்எஸ்எஸ் மாநில தலைவர் கோபாலன் குட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின் முதல்வர் கூறுகையில், ‘‘சிபிஎம் மற்றும் பாஜக தொண்டர்கள் மத்தியில் இது போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. திருவனந்தபுரம், கண்ணூர், கோட்டையம் ஆகிய பகுதிகளில் பாஜக, ஆர்எஸ்எஸ், சிபிஎம் தொண்டர்கள் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் வரும் 6ம் தேதி நடத்தப்படுகிறது. அனைத்து கட்சி கூட்டம் அன்றைய தினம் திருவனந்தபுரத்தில் நடக்கும்’’ என்றார்.

பாஜ தலைவர் ராஜசேகரன் கூறுகையில்,‘‘ சுதந்திரமாக அரசியல் பணிகளில் ஈடுபட உரிமை வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. எங்களை பாதுகாக்க தவறிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது வரை போலீசார் எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை. அமைதி திரும்ப வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார். குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்’’ என்றார்.