சென்னை:
சமூக வலைதளங்களில் ஆபாச படங்கள் மற்றும் அவதூறு கருத்துக்கள் பதிவிடுபவர்கள், பரப்புபவர்கள் குறித்த பட்டியலை தயாரிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சமீப காலமாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்புவது அதிகரித்து வருகிறது. இதனால் பல இடங்களில் வன்முறைகள் ஏற்பட்டு வருகிறது. அதுபோல ஆபாசப் படங்கள் பகிர்வதும் அதிகரித்து உள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் நாட்டில் பாலியல் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழகத்தில் சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவு செய்வோரின் பட்டியலை சேகரித்து அறிக்கை தாக்கல் செய்யும் சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் நீதிபதி குறித்து ஆபாச கருத்து பதிவிட்ட நபர் மீது புகார் கூறப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தனக்கு ஜாமின் வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட நபர் தாக்கல் செய்த மனுமீது ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துக்களை பதிவு செய்தவர்களின் பட்டியலை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சைபர் கிரைம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் படித்த நீதிபதி, அறிக்கை திருப்தியாக இல்லை என்று கூறி, தமிழகம் முழுவதும் ஆபாசக்கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவோரின் பட்டியலை தயாரித்து விவர அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.