மும்பை:
மும்பையில் இருந்து லண்டனுக்கு கடந்த 16ம் தேதி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை சேர்ந்த 9 டபிள்யூ 118 என்ற 777 போயிங் ரக விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. இதில் 330 பயணிகளும், 15 சிப்பந்திகளும் இருந்தனர்.
இந்த விமானம் ஜெர்மனி நாட்டு வான் எல்லையில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஜெர்மன் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் பல முறை தொடர்பு கொண்டும் ஜெட் ஏர்வேஸ் பைலட்களிடம் இருந்து எவ்வித பதிலும் இல்லை.
இதனால் சுதாரித்த ஜெர்மன் நாட்டு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்நாட்டு விமானப்படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விமானப்படையினர் துரிதமாக செயல்பட்டு, இரண்டு போர் விமானங்களை ஜெட் ஏர்வேஸ் விமானத்தை வழி நடத்த அனுப்பி வைத்தது.
போர் விமானத்தில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்துக்கு தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு விமானம் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்தது. சில நிமிடங்களில் தகவல் தொடர்பு சீரானது. இதையடுத்து போர் விமானங்கள் திரும்பிச் சென்றன. பின்னர் ஜெட் ஏர்வேஸ் விமானம் பத்திரமாக லண்டனில் தரையிறங்கியது.
தங்களது நாட்டிற்கு விருந்தாளிகளாக வந்த 330 பயணிகள், 15 சிப்பந்திகளின் உயிரை காத்த ஜெர்மனி விமான படையினரின் செயலை அனைவரும் பாராட்டினர்.
ஜெர்மன் விமானப்படை விரைந்து செயல்படவில்லை என்றால் தகவல் தொடர்பு இல்லாமல் அசம்பாவித சம்பவம் நடந்திருக்க கூடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த தகவலை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இது குறித்து விமான ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.