ஜெர்மனியில் புத்தாண்டு தினத்தன்று பட்டாசு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெவ்வேறு அசம்பாவிதங்களில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
பைரோடெக்னிக் ராக்கெட் மற்றும் வெடிகுண்டுகளால் ரைன்-வெஸ்ட்பாலியா, சாக்சோனி, ஹாம்பர்க் மற்றும் கிரெமன் ஆகிய இடங்களில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சாக்சோனியில் உள்ள ஓஸ்சாட்ஸில், 45 வயதான ஒருவர் “பைரோடெக்னிக் வெடிகுண்டுக்கு” தீ வைத்ததில் தலையில் பலத்த காயங்களால் இறந்தார். இது சக்திவாய்ந்த எஃப்4 வகை பட்டாசு, இதை வாங்குவதற்கு சிறப்பு அனுமதி தேவை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வானவேடிக்கைகளுடன் பாரம்பரிய முறைப்படி புத்தாண்டை வரவேற்ற ஜெர்மனி மக்கள் தாங்களே தயாரித்த வெடிகளை வெடிக்கச் செய்ததில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான காயங்கள் மற்றும் அவை ஏற்படுத்தும் மாசு மற்றும் சத்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மிகவும் சக்திவாய்ந்த பட்டாசுகளை தடை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வன்முறை சம்பவங்களை தவிர்க்க தலைநகர் பெர்லினில் சுமார் 330 பேர் காவலில் வைக்கப்பட்ட நிலையில் முந்தைய ஆண்டுகளை விட குறைவான அசம்பாவிதங்களே நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.