அமெரிக்க அதிபராக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பதவியேற்ற டொனால்ட் டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று சந்தித்தார்.
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நெதன்யாகு இரண்டாவது முறையாக அதிபர் பொறுப்பேற்றுள்ள டிரம்பை சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் மீதான தாக்குதல் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதித்த இருவரும் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது செய்தியாளரிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், காசா பகுதியின் கட்டுப்பாட்டை அமெரிக்கா ஏற்கும் என்று கூறினார்.
ஆனால், எந்த சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை.
மேலும், போரால் பாதிக்கப்பட்ட காசா பகுதியில் இருந்து வெடிக்காத குண்டுகளை அகற்றுதல், காஸாவை மறு கட்டமைப்பு செய்தல் மற்றும் பொருளாதாரத்தைச் சீர்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் 18 லட்சம் பேரும் மற்ற அரபு நாடுகளுக்கு இடம்பெயர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளையில், அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தவும் கணக்கிலடங்கா வேலை வாய்ப்புகளை உருவாக்கப்போவதாகவும் டிரம்ப் உறுதியளித்தார்.
இந்த நிலையில் இறையாண்மையுடன் கூடிய ஒரு பகுதியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுப்பதற்கு அமெரிக்காவின் நட்பு நாடாகிய ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாட்டு கொள்கையுடன் செயல்பட்டு வரும் சவூதி அரேபியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, எகிப்து, ஜோர்டன், சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும், இந்த விவகாரம் குறித்து இந்தியா இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காத நிலையில், அடுத்த வாரம் அமெரிக்க அதிபரை பிரதமர் மோடி நேரில் சந்திக்க இருக்கும் நிலையில், இதுகுறித்து தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.