காசாவில் ஹமாஸ் படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமை (பிப். 15) நன்பகலுக்குள் விடுவிக்காவிட்டால் இஸ்ரேல் ராணுவம் முழுஅளவிலான தாக்குதலில் ஈடுபடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமரின் இந்த மிரட்டல், பாலஸ்தீனியர்களிடையே பரவலான கண்டனத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள துல்கரேம் நகரத்தையும், துல்கரேம் மற்றும் நூர் ஷாம்ஸ் அகதிகள் முகாம்களையும் இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது, அங்கு இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து கைதுகள், வீடுகள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துவது மற்றும் குடியிருப்பாளர்களை துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவற்றை தொடர்ந்து வருவதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பிப்ரவரி 11 அன்று காசாவில் போர்நிறுத்தம் முடிவடையும் என்றும், பாலஸ்தீன போராளிக் குழு பிப்ரவரி 15 சனிக்கிழமை நண்பகலுக்குள் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், ஹமாஸ் தோற்கடிக்கப்படும் வரை இராணுவம் மீண்டும் போரிடும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்களை நெதன்யாகு சந்தித்த பின்னர் இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நெதன்யாகுவின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஹமாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் போர் நிறுத்தம் தொடர்பான உறுதிப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இஸ்ரேல் நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியுள்ளது.