சண்டிகர்
அரியானாவில் பள்ளிப் பிரார்த்தனையின் போது காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும் என அரசு அறிவித்ததால் மாநிலத்தில் சர்ச்சை எழுந்துள்ளாது
அரியானாவை ஆளும் பாஜக அரசு இந்துத்வாவை புகுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. பல ஊடகங்களும் ஆர்வலரும் இதேயே தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆளும் பாஜக இதை ஆரம்பத்தில் இருந்தே மறுத்து வருகிறது. இந்நிலையில் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ராம் பிலாஸ் சர்மா மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டத்தை நிகழ்த்தினார்.
கூட்ட இறுதியில் அமைச்சர் ராம் பிலாஸ் சர்மா பத்திரிகையாளகளிடம் உரையாற்றினார். அப்போது அவர், “பள்ளிகளில் பிரார்த்தனையின்போது இனி காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மந்திரங்களில் தலை சிறந்த மந்திரம் காயத்ரி மந்திரம் ஆகும்.
அத்துடன் தற்போது நாடெங்கும் வன்முறையால் அமைதி சீர் குலைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பள்ளிப் பருவத்தில் இருந்தே மாணவர்கள் நல்வழிப்படுத்தாததே ஆகும். எனவே அதற்காக பகவத்கீதையில் இருந்து ஒரு சில சுலோகங்களை தினமும் பள்ளிகளில் ஜெபிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இது குறித்து அரியானா மாநில முதல்வர் கட்டார், “கீதையின் சுலோகங்கள் மற்றும் காயத்ரி மந்திரம் மாணவர்கள் மத்தியில் நல்லொழுக்கத்தை தூண்டி வன்முறை உணர்வுகளை கட்டுப் படுத்து. அத்துடன் நமது நாட்டுக்காக தியாகம் செய்த பல தியாகிகளின் வரலாற்றையும் மாணவர்களுக்கு தெரிய வைக்க உள்ளோம்” என தெரிவித்தார்.
இதற்கு அரியானா மாநில காங்கிரஸ் தலைவர் கிரண் சௌத்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், “ இந்த ஆட்சியில் விவசாயிகள் சொல்ல முடியாத அளவுக்கு துயரடைகின்றனர். வர்த்தகம் நசுங்கி வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. அரசு அலுவலகங்களில் ஊழல் நிரம்பி உள்ளது. இதை எல்லாம் மக்களின் மனதில் இருந்து திசை திருப்பவே இந்த பாஜக அரசு இவ்வாறு அறிவிப்புகள் வெளியிடுகிறது” எனக் கூறி உள்ளார்.