சென்னை: சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நடிகர் கமல்ஹாசன், இது மக்களின் மீது மத்திய அரசு நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்றும், அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும் என்றும் விமர்சித்துள்ளார்.
கடந்தசில மாதங்களாக நாடு முழுவதும் பெட்ரோல்,டீசல், சமையல் எரிவாயுக்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருசிறது. இதனால், விலைவாசிகளும் உயர்ந்து வருகின்றன. ஏற்கனவே கொரோனாதொற்றால், வாழ்வாதாரத்தை இந்த சாமானிய மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையே இருந்து வருகிறது.இந்த நிலையில், இன்று சமையல் கேஸ் விலை மேலும் ரூ. 50 உயர்த்தப்பட்டு, சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேஸ் விலை உயர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75/-உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.