சென்னை: குழாய் மூலம் கேஸ் இணைப்பு; உணவு பூங்காக்கள்; புதிய தொழிற்பூங்காக்கள் என பல்வேறு திட்டங்கள் குறித்து தமிழக தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தைத் தொடர்ந்து, தமிழக தொழில்துறை கொள்கை விளக்கக்குறிப்பு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதில், தமிழகம் உற்பத்தி சூழல் அமைப்பில் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. உற்பத்தித் துறையில் சுமார் 23 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 2.28 கோடி வீடுகளுக்கு ரூ. 35 ஆயிரம் கோடியில் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு (கியாஸ்) வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களில் 2,785 விற்பனை நிலையங்கள் மூலம் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், பெரம்பலூர், மதுரை, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டாரம் தொழிற்சாலைகளின் மையமாக உருவாகி உள்ளதால் அங்கு புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முயற்சிக்கிறது. சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க டிட்கோவுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது
“சென்னை அருகே பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் சமர்ப்பித்துள்ளது. விமான போக்குவரத்து சேவைகளுக்கான உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2021-22-ம் ஆண்டில் மேற்கொண்ட 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 77 திட்டங்களை நிறுவும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டில் அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.40 சதவீதம் ஆகும். வலிமை சிமென்ட் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை 39,239 மெட்ரிக் டன் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 19.02 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2021-22ம் நிதியாண்டில் 21.79 லட்சம் கோடி ரூபாயாக வேகமாக உயர்ந்துள்ளது. 2020-21-ஆம் நிதியாண்டில், 48.1 பில்லியன் டாலராக இருந்த (மாநில உள்நாட்டு உற்பத்தியில் 18%), மாநில உற்பத்தித் துறையின் பங்களிப்பை, 2030-31-ஆம் நிதியாண்டில், 250 பில்லியன் டாலர் (மாநில உள்நாட்டு உற்பத்தியில் 25%) அளவிற்கு உயர்த்துவதற்கான வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த இலக்கினை அடைய 23 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும், 46 இலட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில், மருத்துவ சாதனங்கள் பூங்கா, மணப்பாறை, திண்டிவனம் மற்றும் தேனி ஆகிய இடங்களில் உணவுப் பூங்காக்கள் மாநல்லூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் முறையே மின் வாகனங்களுக்கான பூங்கா மற்றும் வருங்கால நகர்திறன் பூங்கா பிள்ளைப்பாக்கம் மற்றும் மாநல்லூரில் மின்னணுவியல் உற்பத்தித் தொகுப்புகள் விருதுநகரில் ஒருங்கிணைந்த ஆடை மற்றும் ஜவுளிப் பூங்கா
பனப்பாக்கத்தில் தோல் காலணிகள் மற்றும் உப பொருட்களின் உற்பத்தித் தொகுப்புகள் சென்னை, நந்தம்பாக்கத்தில் நிதி நுட்ப நகரம்.
ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு – முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை அறியச் செய்திட, சமூக ஊடகங்கள், மின்னியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாக மாநிலத்தின் முதலீட்டு மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பரவச் செய்தல்.
வழிகாட்டி நிறுவனம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தவிர்த்து, அனைத்து நிறுவனங்களின் முதலீடுகளை மாநிலத்திற்கு ஈர்த்திடுவதற்கான முகமையாகும். மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள், இரசாயனங்கள், மின்னணுவியல் மற்றும் வன்பொருள், கனரக பொறியியல், தோல் பொருட்கள், ஆடைகள், நிதிச் சேவைகள், தகவல் தொழில் நுட்பம், தகவல் சேவைகள் போன்ற துறைகளிலும், தொழில் நுட்பம் சார்ந்த வகையில் தொழில் கட்டமைப்புகளை மேம்படுத்த, கோயம்புத்தூர், பெரம்பலூர், மதுரை, வேலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், புதிய தொழில் பூங்காக்களை அமைத்திட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
2021-22-ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.40 சதவீதம் ஆக உள்ளது. ஹீண்டாய், ப்யூஜோ, BMW, டெய்ம்லர், கேட்டர்பில்லர், அசோக் லேலண்ட், TVS, ரெனால்ட் நிஸ்ஸான், ஃபாக்ஸ்கான், டெல்டா, டெல், HP, சால்காம்ப், சியட், சாம்சங், மிச்செலின், MRF, கிரண்ட்ஃபோஸ், வெஸ்டாஸ், நார்டெக்ஸ், ஹிட்டாச்சி மற்றும் L&T போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள், தங்களது உற்பத்தித் திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. சமீபத்தில், ஓலா எலக்ட்ரிக், டாடா எலெக்ட்ரானிக்ஸ், ஃபர்ஸ்ட் சோலார் மற்றும் பெகாட்ரான் போன்ற புதிய நிறுவனங்களையும் தமிழ்நாடு ஈர்த்துள்ளது.
இவை மட்டுமின்றி, தமிழ்நாடு அதிக அளவில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து வரும் மாநிலமாகவும் திகழ்கிறது. 80-க்கும் மேற்பட்ட குளோபல் பார்ச்சூன் 500 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.
2019-ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் இது 33.33 சதவீதம் வளர்ச்சி ஆகும். அதே நேரத்தில், தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்களும் தங்களது முதலீடுகளை அதிகரித்துள்ளன.
உலகாவிய முதலீட்டு மையமாக தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள பெரும் நம்பிக்கையை இந்த புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.