கொல்கத்தா: கொரோனா நெருக்கடி காரணமாக, கடந்த 4 மாதங்களில் மட்டும், தான் 22 முறை பரிசோதனைக்கு உட்பட்டதாக தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி.

அவர் கூறியுள்ளதாவது, “கடந்த 4.5 மாதங்களில், நான் மொத்தம் 22 முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். இதில், ஒருமுறை கூட முடிவு நேர்மறையாக வரவில்லை. என்னை சுற்றி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததால் நானும் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக பிசிசிஐ குழு நடத்தியது பெருமையாக உள்ளது. அடுத்த 14-வது சீசன் போட்டி இந்தியாவில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நாங்கள் 400 பேர் உயிர் பாதுகாப்பு வளையத்தில் இருந்தோம்.

எல்லோரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, இரண்டரை மாத காலத்தில் 30,000 முதல் 40,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் தனிமைப்படுத்துதல் காலம் நேற்றுடன் (நவ.24)முடிவடைந்தது. அனைத்து வீரர்களும் உடற்தகுதியுடன் இருக் கிறார்கள்.

உள்ளூர் கிரிக்கெட் சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. அடுத்த வருட தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி-20 ஆட்டங்கள் கொண்ட முழுமையான தொடரில் பங்கேற்கவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை குறித்து பலர் பேசி வருகிறார்கள். மும்பை மற்றும் டெல்லியில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கேள்விப்பட்டேன். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம்” என்று விரிவாகப் பேசியுள்ளார் கங்குலி.