கொழும்பு: ஐசிசி தலைவர் பதவிக்கு இநதிய முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான செளரவ் கங்குலிதான் பொருத்தமானவர் என்றுகூறி தனது ஆதரவை தெரிவித்துள்ளார் இலங்கை முன்னாள் கேப்டன் குமார சங்ககாரா.
“கங்குலியின் கூர்மையான கிரிக்கெட் அறிவும், பரந்த அனுபவமும் உலக கிரிக்கெட்டிற்கு பெரியளவில் துணை செய்யும்” என்றுள்ளார் அவர்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான், பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலியின் மிகப்பெரிய ரசிகன் என்பதை இங்கு கூறுகிறேன். ஐசிசி தலைவர் பதவிக்கு என்னைப் பொறுத்தவரை, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிதான் பொருத்தமானவராக இருப்பார். அவரின் பாரபட்சமில்லாத செயல்பாடு, கிரிக்கெட்டின் நலனுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் போல் யாரும் அளிக்க முடியாது.
ஐசிசி தலைவராக கங்குலி பதவி ஏற்றால், கிரிக்கெட்டில் நிச்சயம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும். கங்குலியின் மனதில் கிரிக்கெட் நலன் குறித்த அதிக அக்கறை உண்டு. பிசிசிஐ தலைவராகவோ, இங்கிலாந்து கிரிக்கெட் சங்கத் தலைவராகவோ, இலங்கை வாரியத்தின் தலைவராகவோ அல்லது எந்த நாட்டு கிரிக்கெட் அமைப்பின் தலைவராகவோ இருந்தாலும், ஐசிசி தலைவராக இருந்தாலும் கிரிக்கெட் நலன் எனும் விஷயம் மாறக்கூடாது.
ஐசிசி தலைவராக வரும்போது முற்றிலும் சர்வதேச மனநிலையோடு அணுக வேண்டும். நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், ஆசியாவிலிருந்து வந்துள்ளோமோ, அல்லது வேறு எங்கிருந்து வந்திருக்கிறோம் என்ற நினைப்பெல்லாம் கூடாது. அண்டை நாடுகளுக்கு பாரபட்சம் காட்டுவதோ, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு ஆதரவாக இருப்பதோ கூடாது.
நான் ஒரு கிரிக்கெட் வீரர், கிரிக்கெட்டின் நலனுக்கும், கிரிக்கெட் விளையாடும் அணிகளின் நலனுக்கும் என்ன தேவையோ அதை செய்வேன் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய திறமைகள் அனைத்தும், செளரவ் கங்குலியிடம் இருக்கிறது. நாடுகளுக்கு இடையே, அணிகளுக்கு இடையே நல்ல நட்புறவை வளர்க்கும் திறமை இருக்கிறது. அது, அவரை ஐசிசி தலைவர் பதவிக்கு உயர்த்தும்” என்றுள்ளார் சங்ககாரா.