கங்கை நதியில் பயணம் துவங்கிய மூன்றாவது நாளில் ‘கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் தடுமாறி நின்றது.
பிரதமர் மோடியால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் வாரணாசியில் இருந்து துவக்கிவைக்கப்பட்ட இந்த உள்நாட்டு கப்பல் போக்குவரத்து திட்டம் பீகாரில் இன்று தரை தட்டி நின்றது.
இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உ.பி.யில் துவங்கி பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அண்டை நாடான வங்காளதேசம் வழியாக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகர் வந்தடையும்.
51 நாட்கள் 3200 கி.மீ. தூரம் உள்நாட்டு நீர்வழி தடத்தில் பயணம் செய்யும் இந்த கப்பல் உலகின் மிக நீண்ட உள்நாட்டு நீர்வழி சொகுசு கப்பல் என்று வர்ணிக்கப்பட்டது.
68 கோடி ரூபாய் செலவில் 62 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள மிதக்கும் ஐந்து நட்சத்திர விடுதியான கங்கா விலாஸ் சொகுசு கப்பலில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ஒரு முழு பயணத்திற்கு ரூ. 20 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கப்பலில் 39 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
சர்வதேச சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த கப்பலில் இசை இரவுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், கச்சேரிகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உடற்பயிற்சி கூடம், ஸ்பா, திறந்த தோட்டம், விண்வெளி பால்கனி வசதி உள்ளது.
ஸ்விட்ஸ்ர்லாந்து நாட்டைச் சேர்ந்த 32 சுற்றுலா பயணிகளுடன் தனது முதல் பயணத்தை துவங்கிய இந்த கப்பல் பீகார் மாநிலம் சப்ரா அருகே உள்ள தொல்லியல் சுற்றுலா தளத்தை பார்வையிட பயணிகளை அழைத்துச் சென்றது.
இந்த நிலையில், அந்த பகுதியில் கங்கையில் நீரோட்டம் குறைவாக இருந்ததை அடுத்து ஆற்று மணலில் தரை தட்டி கப்பல் நடுவழியில் நின்றது. இதனை சரிசெய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கையில் பயணம் செய்யும் இந்த சொகுசு கப்பலில் வெளிநாட்டு பயணிகளை மகிழ்விக்க அசைவ உணவுகள் மற்றும் மதுபானங்கள் விற்கப்படுவதாக அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன் குற்றம் சாட்டினர்.
இதற்கு கங்கா விலாஸ் சொகுசு கப்பலை இயக்கும் அந்தாரா நிறுவனம் இந்த கப்பலில் அசைவ உணவுகள் மற்றும் மதுவகைகள் விற்பனை செய்யப்படுவதில்லை என்று விளக்கமளித்திருந்தது.
இருந்த போதும் இந்த நிறுவனம் இயக்கி வரும் மற்ற சொகுசு கப்பல்களில் மதுவகைகள் தண்ணீராக வழங்கப்பட்டு வரும் நிலையில் வெளிநாட்டினர் பயணம் செய்யும் கங்கா விலாஸ் கப்பலில் மதுவகைகள் பரிமாறப்படுவதில்லை என்று அந்நிறுவனம் கூறுவது நம்பும்படியாக இல்லை என்றும் சிலர் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி துவக்கி வைத்த சொகுசு கப்பல் பயணம் மூன்றாவது நாளிலேயே தரை தட்டி நின்று மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளதோடு கப்பல், துறைமுகம் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய தீவு நீர்வழிகள் ஆணையத்தின் செயல்பாடுகளும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.