கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவதோ, சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது.
எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப் படுகிறது.
மேலும், பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு செய்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் சமூக இடை வெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
சிறிய திருக்கோவில்களில் பொதுமக்கள் வழிட்ட ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய திருக்கோவில்களில் வழிபாடு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டு செயல்முறைகள் தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களும், திருக்கோவில் நிர்வாகமும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வழிபாடு தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை கொசப்பேட்டை உள்பட தமிழக முழுவதும் குயவர்கள் ஏராளமான விநாயகர் சிலைகளை செய்து விற்பனைக்காக வைத்திருந்த நிலையில், தமிழக அரசின் அறிவிப்பு அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக சிதைத்துள்ளது.