சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்த நிலையில், சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலம் நடைபெறுகிறது. இதற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சிலைகள் ஊர்வலத்திற்கு 17 வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதை மீறினால் கைது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த சிலைகள் நீர் நிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. கோவை உள்பட பல மாவட்டங்களில் ஏற்கனவே விநாயகர் சிலைகள் கரைப்பு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், சென்னையில் இன்றும், நாளையும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறுகிறது.
அதன்படி, சென்னை பெருநகர காவல் எல்லையில் வைக்கப்பட்டுள்ள 1,524 சிலைகள் வழிபாடுகள் முடிவடைந்த நிலையில், அந்த சிலைகள் காவல்துறை அனுமதி வழங்கிய சாலைகளான 17 வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சிலைகளை கரைக்க இன்று காலை 10 மணி முதல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பல்வேறு இந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் என 4 கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
விநாயகர் ஊர்வலத்தின் போது எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை எடுத்து செல்ல போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் 16,500 காவலர்கள் மற்றும் 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று 1,300 சிலைகளுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெறுகிறது. அன்றைய தினம் சிலைகளை கரைப்பதற்கு கடைசி நாள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.