சேலம்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று சேலம் உள்பட சில மாவட்டங் களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன். இன்று சில மாவட்டங்களிலும் கரைக்கப்பட உள்ளது. சென்னையில் நாளை(4ந்தேதி) விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் இந்து முன்னணி சார்பில் மட்டும் சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 600 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு குழுக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இந்த விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் விநாயகர் சிலைகளை பாலவாக்கம், பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 கடற்கரைகளில் மட்டுமே கரைக்கவேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகை எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

விநாயகர் சதுர்திதியையொட்டி, 3 நாட்கள் சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு சேலம் உள்பட சில மாவட்டங்களில்,  நேற்று மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஏரி உள்பட நீர்நீலைகளில் விசர்ஜன செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

சேலம் செரி ரோட்டில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோவில் அருகில் இந்து முன்னணி சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட சுமார் 60-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் டெம்போ வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு வரப்பட்டன.  அதைத்தொடர்ந்து, பலத்த பாதுகாப்பு இதையடுத்து இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, தேசிய சிந்தனை கழகத்தின் தமிழ்நாடு அமைப்பாளர் விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் அண்ணாதுரை, கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தின் போது பெண்கள் விளக்கேற்றி சென்றனர். மேளதாளங்கள் முழக்கத்துடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் செரி ரோடு, அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக கன்னங்குறிச்சி மூக்கனேரிக்கு சென்றது. அங்கு சிறப்பு பூஜைக்கு பின் மூக்கனேரியில் விநாயகர் சிலைகள் பாதுகாப்பாக கரைக்கப்பட்டன.  இதுதவிர மூக்கனேரியில் நகரின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தனியாக வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை மேளதாளத்துடன் வாகனங்களில் எடுத்து சென்று கரைத்தனர்.

இதேபோல், மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அம்மாபேட்டை குமரகிரி ஏரிக்கும் விநாயகர் சிலைகள் கொண்டு சென்று கரைக்கப்பட்டன. மாநகரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 816 விநாயகர் சிலைகள் ஏரிகளுக்கு எடுத்து சென்று கரைக்கப்பட்டன. மேலும் வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டவர்களும் நேற்று காலை முதலே ஏரிகளுக்கு கொண்டு சென்று கரைத்தனர். இதே போல புறநகரில் போலீஸ் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் 1,045 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.

இந்த நிலையில் மேச்சேரி, ஓமலூர், வெள்ளாறு, கூணான்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூணான்டியூர் காவிரி ஆற்றங்கரையோரத்திலும், திப்பம்பட்டி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, வனவாசி, தாரமங்கலம், குஞ்சாண்டியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திப்பம்பட்டி காவிரி ஆற்றங்கரையோரத்திலும் விநாயகர் சிலைகளை கரைத்தனர். நேற்று மட்டும் 950 விநாயர் சிலைகள் கரைக்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் 1,766 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர் .    ஏற்காட்டில் 21 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் படகு இல்ல ஏரியில் படகுகள் மூலம் கொண்டு சென்று கரைக்கப்பட்டன.

கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே விநாயகரின் வாகனமான எலியை பிரமாண்ட வடிவத்தில் அமைத்து அதன் மீது விநாயகர் சிலை வைத்து ஊர்வலமாக அழைத்து சென்று சின்னாற்றில் சிலையை கரைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கரகாட்டம், கலை நிகழ்ச்சிகள், ஆட்டம் பாட்டத்துடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று குளத்தில் கரைக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 41 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சேவுகப் பெருமாள் அய்யனார் ஆலய தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் இந்து முன்னணி, பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்தன. திருவண்ணாமலையில் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது. திருவண்ணாமலை காந்தி சிலை அருகே ஊர்வலம் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ட்ரோன் கேமராக்கள் மூலம் ஊர்வலம் கண்காணிக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணி சங்கத்தை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கல்லக்கடை மூளை, தண்டராம்பட்டு சாலை, வழியாக தாமரை குளம் சென்றது. இந்த ஊர்வலம் செல்லும் போது இளைஞர்கள் பலர் ஆடி, பாடி ஆரவாரம் செய்தனர். மேளதாளம் முழங்க வாகனங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் அணிவகுத்து சென்றது. இதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். பலர் விநாயகர் சிலைகளை வணங்கினர். தங்கள் வீடுகளில் வைத்து வணங்கப்பட்ட சிறிய அளவிலான சிலைகளை ஊர்வலத்தில் சென்ற வாகனத்தில் எடுத்து சென்று வைத்தனர்.