சென்னை: காந்தியடிகளின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மற்றும் மாவட்ட முக்கிய நகரங்களில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற உள்ளது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 155 வது பிறந்தநாள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 49 வது நினைவு நாள், லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் 120 வது பிறந்தநாள் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை முன்னிட்டு காந்திய சிந்தனை, அமைதி, மதநல்லிணக்கம், அகிம்சை, வெறுப்பு அரசியலுக்கு எதிரான பிரச்சாரம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு எதிரான பொய் மற்றும் அவதூறு பிரச்சாரத்திற்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் நாளை (02.10.2024) மாவட்ட முக்கிய நகரங்களில் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை அறிவித்து உள்ளார்.
அதன்படி, நாளை தமிழகம் முழுவதும் 77 இடங்களில் நாளை காங்கிரஸ் பாத யாத்திரை நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி பாத யாத்திரை நடத்த காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் வெறுப்பு, அரசியலுக்கு எதிராகவும் நடத்தப்படும் இந்த பாத யாத்திரை சென்னையில் நாளை (2-ந் தேதி) காலை 7 மணியளவில் அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகில் இருந்து புறப்படுகிறது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் இந்த பாத யாத்திரை மேதின பூங்கா, சிந்தாதிரிப்பேட்டை, ரமடா ஓட்டல் சந்திப்பு, லாங்ஸ் கார்டன், புதுப்பேட்டை, பாந்தியன் ரோடு வழியாக அருங்காட்சியகத்தை அடைகிறது. அங்கு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பிரகாரத்தை நிறைவு செய்கிறார்கள்.
இதேபோல் நாளை மாநிலம் முழுவதும் 77 இடங்களில் பாத யாத்திரை நடக்கிறது. திருச்சியில் திருநாவுக்கரசர் தலைமையிலும், ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையிலும் சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையிலும் இதேபோல் ஒவ்வொரு இடத்திலும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமையிலும் பாத யாத்திரை நடக்கிறது.