லண்டன்: அமெரிக்காவில் காந்தியடிகளின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மட்டுமல்ல, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் மகாத்மா காந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் டேவிஸ் நகரில் உள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை 4 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா அன்பளிப்பாக அளித்தது.
இந்த சிலை 6 அடி உயரம், 294 கிலோ எடையும் கொண்டது. சிலையை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ள சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தி நினைவு நாளான இன்று, சிலையின் கால் பகுதியும், தலை பகுதியும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம், உலகம் முழுவதும் மதிக்கக்கூடிய ஒரு தலைவருக்கு எதிரான இந்த தீங்கிழைக்கும் மற்றும் இழிவான செயலை கடுமையாக கண்டிப்பதாக கூறி உள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், குற்றவாளிகள் விரைவில் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
சான்பிரான்ஸ்கோவில் உள்ள துணை தூதரகம் இது குறித்து டேவிஸ் நகராட்சி நிர்வாகம் மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளதாக கூறி உள்ளது. டேவிஸ் நகர மேயர் இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததாகவும், அவர்கள் விசாரணையை தொடங்கி இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.