புதுடெல்லி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிரடி காட்டிய நவ்தீப் சைனியின் வளர்ச்சியை, தொடக்க காலத்தில் தடுக்க முயன்றவர்களை விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய பேட்ஸ்மேனும், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர்.
“உனது முதல் சர்வதேச போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்கு வாழ்த்துக்கள் நவ்தீப்..! நீ பந்து வீசுவதற்கு முன்பே 2 விக்கெட்டுகளை கைப்பற்றிவிட்டாய்! நீ களத்தில் இறங்குவதற்கு முன்னரே உனக்கு முடிவுரை எழுத முயன்றவர்கள் வெட்கப்பட வேண்டும்” என்றார்.
கடந்த 2013ம் ஆண்டு கவுதம் கம்பீருக்கும், டெல்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த பிஷான் சிங் பேடி மற்றும் துணைத் தலைவராக இருந்த சேட்டன் செளஹான் ஆகியோருக்குமிடையில் நவ்தீப்சைனியை அணியில் தேர்வுசெய்வது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்தாண்டுகூட, இவர்கள் இருவரையும் சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் கம்பீர். அது, ஆப்கன் அணியுடனான டெஸ்ட் போட்டியில் ஆட நவ்தீப் சைனி அழைக்கப்பட்ட நேரம்.
“தனக்கு வாய்த்த இந்த வாழ்வு மற்றும் தனது வெற்றி ஆகியவை கவுதம் கம்பீரால் மட்டுமே தனக்கு வழங்கப்பட்டது. அவரைத்தவிர வேறுயாருக்கும் பங்கில்லை” என்று நன்றிபட கூறியுள்ளார் நவ்தீப் சைனி.