சென்னை,

மிழகத்தில் மீண்டும் எண்ணை குழாய் பதிக்கும்  கெயில் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த முன்வந்திருப்பதற்கு, திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின்  மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விவசாய நிலங்களை பாதிக்கும்  கெயில் திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முயற்சி செய்தால்,   விவசாயிகளுடன் இணைந்து திமுகவும் போராட்டத்தில் ஈடுபடும் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் உள்ள விளைநிலங்களின் ஊடாக கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்களை பதிக்க, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மீண்டும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

துப்பாக்கி குண்டுகளுக்கும் அஞ்சாமல் விளைநிலங்களைக் காப்போம் என்ற விவசாயிகளின் குரலை மத்திய அரசு உதாசீனப்படுத்தக்கூடாது.

இத்திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கப் போவதில்லை என்று மறைந்த ஜெயலலிதா உறுதி மொழி அளித்திருந்தார், மேலும்  இதுகுறித்து  கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம், மேகதாதுவில் தடுப்பணை கட்டும் கர்நாடகாவின் திட்டம் போன்றவற்றில் தமிழகத்தின் உரிமைகளை கோட்டைவிட்ட அதிமுக அரசு, கெயில் விவகாரத்தில் தூங்கிவிடக்கூடாது.

தமிழகத்தில் விவசாய நிலங்கள் மத்தியில் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்றும், அதை மீறி செயல்படுத்த முனைந்தால் மேற்கு மண்டல விவசாயிகளுடன் இணைந்து திமுக போராடும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.