சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் 10ந்தேதி முதல் 15 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாடுகள் அனைத்தையும் முறையாக பின்பற்றி மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டிருக்கும் வீடியோவில் பேசியிருப்பதாவது,

கொரோனா முதல் அலையை விட மோசமாக இந்த தொற்று பரவி வருகிறது. இளைஞர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. வேறு நோய்ப் பாதிப்பு இல்லாதவர்களுக்கும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. பிற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய தகவல்கள் அச்சம் தரக்கூடிய அளவில் உள்ளது. மருத்துவர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து செயல்படுகிறார்கள். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். முழு ஊரடங்கு அவசியம் என்று அவர்கள் கூறினார்கள். மருத்துவ நிபுணர்களும் அதையே பரிந்துரை செய்தார்கள். இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பாடாக இருந்தால் தொற்று நோய் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். இந்த சங்கிலியை உடைக்கலாம். மக்கள் அனைவரும் அனைவரும் வீட்டிலேயே இருங்கள். முககவசம் அணியுங்கள். கிருமிநாசினி பயன்படுத்துங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள் பழங்கள் காய்கறிகள் சாப்பிடுங்கள். அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவரின் ஆலோசனையின் படி சிகிச்சை எடுங்கள். பயப்பட வேண்டாம். இதுகுணப்படுத்த கூடிய நோய் தான். இது சவாலான காலம் தான். அதே நேரத்தில் கடக்க முடியாத காலம் இல்லை.

நேற்று நடத்திய அதிகாரிகள் கூட்டத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டு சொன்னேன். முழு உண்மையை சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். அந்த வகையில் கொரனோ பெருந்தொற்றுக்கு எதிராக நமது நடவடிக்கைகள் இன்று முதல் வேகம் அடைந்துள்ளது. அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நீங்கள் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.