இம்பால்: சத்திஸ்கர், மத்தியபிரதேச மாநிலங்களில்  சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான தேதிகளை அறிவித்தது. அதன்படி,  சத்தீஸ்கர் மாநிலத்தில்  நவம்பர் 7  மற்றும் 17 ஆம் தேதிகளில்  இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும்,  மத்திய பிரதேச மாநிலத்தில் நவ., 17ல்  வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சத்திஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7ந்தேதி 20 தொகுதிகளுக்கு  நடைபெற்ற நிலையில், இன்று 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இன்று  70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாநில அமைச்சரும், துர்க் கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளருமான தாம்ரத்வாஜ் சாஹு துர்க்கில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

அதுபோல, மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் 2533 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்த வாக்குகளை செலுத்தி வருகின்றனர். சோன்காச் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சஜ்ஜன் சிங் வர்மா இந்தூரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

மாநில முதல்வர் சவுகான் வாக்களிக்கும் முன் செய்தியாளர்களை சந்தித்தபோது,  “எல்லா இடங்களிலும் மக்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் நிலவுகிறது. லட்லி பெஹ்னா, குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களிடமிருந்து நான் அன்பைப் பெறுகிறேன்…” என கூறினார்.

இன்று நடைபெறும் தேர்தல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மத்திய பிரதேச மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வாக்காளர்கள், ஆர்வத்துடன் வாக்களித்து இந்த மாபெரும் ஜனநாயகத் திருவிழாவின் அழகை மேம்படுத்துவார்கள் என நம்புகிறேன். முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு எனது சிறப்பு வணக்கம் என்று கூறியுள்ளார்.

இரு மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படுகிறது.