போபால்:

பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது என்பதையே தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட் பிரதிபலிப்பதாக மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் குறித்து மத்தியபிரதேச முதல்வர் கமல்நாத் கூறியதாவது;

மிகைப்படுத்த கூடிய வாக்குறுதிகளும் வர்ணஜாலங்கள் நிறைந்ததாக இந்த பட்ஜெட் உள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் ஏதும் செய்யாமல் இருந்துவிட்டு, தற்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.

இதன்மூலம் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்பதை அவர்களே அறிந்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், விவசாயிகளுக்கு நாள்தோறும் ரூ. 16. 50 மட்டுமே கிடைக்கும்.
இந்தத் தொகை விவசாயிகள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடுமா?

ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாகவும், ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்றும் வாக்குறுதி அளித்தார்கள்.

இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. வேலையில்லா திண்டாட்டத்தை பொருத்தவரை உலக அளவில் இந்தியா கடந்த நான்கரை ஆண்டுகளாக மோசமான நிலையில் உள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத் தால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இவை இரண்டுமே தோல்வியில் முடிந்தன.

இவ்வாறு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.