வாஷிங்டன்
இந்த வருடத்தின் முதல் சந்திரகிரகணம் வரும் 31 ஆம் தேதி முழு கிரகணமாக அமையும் என சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு வருடத்தின் ஒரே மாதத்தில் இரு பவுர்ணமிகள் வரும் போது அது புளூ மூன் என அழைக்கப் படுகிறது. அப்படி ஒரு புளூமூன் இந்த மாதம் 31 ஆம் தேதி வருகிறது. அத்துடன் அன்று சந்திர கிரகணமும் நடை பெறுகிறது. சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் முழு சந்திர கிரகணம் என்னும் பெருமையும் இதற்கு உண்டு.
ஜனவரி 31 அன்று நடைபெற உள்ள இந்த முழு சந்திர கிரகணத்தினால் அன்று நள்ளிரவில் பசிஃபிக் பெருங்கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இந்த கிரகணத்துக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த நாடுகளில் இந்த முழு சந்திர கிரகணம் தெரியும் என எதிர்பார்க்கப் படுகிறது.
அது தவிர மத்திய ஆசியா, கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து ஆகிய இடங்களிலும் மாலை வேளையில் இந்த கிரகணம் முழுமையாக தெரியும். இது தவிர அலாஸ்கா, கனடாவின் வடமேற்கு பகுதி, ஹவாய் ஆகிய நாடுகளில் தெரிய வாய்ப்புண்டு.
சுமார் 77 நிமிடங்கள் நீடிக்கும் இந்த கிரகணத்தில் முழு கிரகணம் அடையும் போது சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகவும், மேல் விளிம்பு இருட்டாகவும் காணப்படும் என வானிலை ஆய்வு மையங்கள் கூறுகின்றன. அடுத்த முழு சந்திர கிரகணம் வரும் 2028 ல் நிகழும் என கூறப்படுகிறது.