சென்னை: மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவது தொடர்பாக செய்தித்தாள்களில் வந்த செய்திகள் தொடர்பாகவும் ரெம்டிசிவிர் பற்றாக்குறை தொடர்பான செய்திகளையும் தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் வழக்கை எடுத்து கொண்டது.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை, தடுப்பு மருந்து பற்றாக்குறை இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து, வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. ரெம்டிசிவிர் மருந்து பற்றாக்குறை இல்லை என்று விளக்கம் அளித்தார். மேலும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகியும் விளக்கம் அளித்தார். தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர்கள் பலர் ஆஜராகி, அடுக்கு அடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தார்.
மத்திய அரசு தரப்பில், வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவது குறித்து தமிழக அரசுடன் ஆலோசனை நடத்திதான் நடவடிக்கை எடுத்ததாகவும். இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் பரிசலினை செய்ய உள்ளதாகவும் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடுப்பூசி, ரெம்டிசிவிர் மருந்து அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். மேலும், மே 1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.
ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை ஏப்ரல் 28ம் தேதி வெளியிடலாம். வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும், சமரசம் செய்ய கூடாது. வாக்கு எண்ணிக்கை தொடர்புடைய வாகனங்களை மட்டும் 2 நாட்களில் அனுமதிக்கலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.