டில்லி:
நாளை முதல் இணையதள வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து உள்ளது பிஎஸ்என்ஸ் டெலிகாம் நிறுவனம்.
`ரிலையன்ஸ் ஜியோ` வருகையால் இந்திய தொலைதொடர்பு துறையில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்-ன் தலைவரும், தலைமை மேலாண் இயக்குனருமான அனுபம் ஸ்ரீவத்சவா கூறும்போது,
போட்டியாளர்களுக்கு இணையாக கட்டணச் சலுகையில் சேவைகளை வழங்க பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் இயலும் என்றும், ரிலையன்ஸ் ஜியோவிற்கு இணையாக கட்டண சலுகைகளை வழங்குவதில் பி.எஸ்.என்.எல் போட்டியாளராக விளங்கும் என கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து ஒரு சில அதிரடி நடவடிக்கைகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் இறங்கி உள்ளது.
புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) கம்பியில்லா அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) இணையதள வசதியை சலுகை கட்டணத்தில் ‘எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் பிபி 249’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மாதம் 300 ஜி.பி. வரை பதிவிறக்கம் செய்ய ரூ.249 கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
அதாவது 1 ஜி.பி.க்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணமே வாடிக்கையாளர்களிடம் பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கூடுதல் தகவல்களை பெற வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை அணுகலாம். அல்லது இலவச அழைப்பான 1800 345 1500 என்ற எண்ணிலும், www.bsnl.co.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.