சபரிமலை
சபரிமலையில் ஏற பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட நீலிமலை பாதை இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சபரிமலை கோவிலுக்குப் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு பர்வல் குறைந்ததால் அதில் சிறிது சிறிதாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. சபரிமலைக்குச் செல்லும் பாரம்பரியமான நீலிமலை பாதை அடைக்கப்பட்டு பக்தர்கள் சுப்ரமணிய பாதை வழியாகச் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பம்பையில் பக்தர்கள் குளிக்கவும், சன்னிதானத்தில் பக்தர்கள் இரவில் தங்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது நாடெங்கும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதையொட்டி நேற்று முதல் பம்பை ஆற்றில் குளிக்கப் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தவிர இரவில் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்க அனுமதிக்கப்பட்டு 600 அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
நீலிமலை பாதை செப்பனிடப்பட்டு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுப்ரமணிய பாதை மூலம் மட்டும் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் இன்று முதல் இரு வழியிலும் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் வசதிக்காக நீலிமலை பாதையில் அவசர மருத்துவச் சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.