சென்னை
இன்று முதல் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ரயில்கள் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 2 வழித்தடங்களில் மின்சார ரயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. எனவே எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில்கள் கடற்கரை – எழும்பூர் இடையே செல்லும்போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதையொட்டி 4½ கி.மீ தொலைவுக்கு ரூ.279 கோடி மதிப்பீட்டில் கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணிக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்ததால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி 4-வது வழித்தடம் அமைக்கும் பணி தொடங்கியது.
எனவே கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையில் பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில், 14 மாதங்களுக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பறக்கும் மின்சார ரயில் சேவை தொடக்கி உள்ளது.
தற்போது இருமார்க்கமாகவும் 90 ரெயில்கள் இயக்கப்பட உள்தாகவும் சில பணிகள் முடிந்தபிறகு முழுமையான ரெயில் சேவை தொடங்கும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தற்போது கடற்கரை – வேளச்சேரி வரை காலை 4.53 முதல் இரவு 11.13 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக வேளச்சேரி – கடற்கரை வரை காலை 4 முதல் இரவு 10.20 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.