கோவை
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை மாவட்டத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாகிறது.
வரும் 9 ஆம் தேதி வரை தமிழகத்தில் கொரோனாவை ஒட்டி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழக ரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகக் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையொட்டி கொரோனா தடுப்பு குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை நடத்தக் கோவை மாவட்ட ஆட்சியர் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். இதில் காவல்துறை அதிகாரிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்,
அந்த கூட்டத்தில் எடுத்த முடிவுகளின்படி கோவை ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,
”இன்று (ஆக.2) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி, அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5,6,7-வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு ஆகிய இடங்களில் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர, மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. சில்லறை விற்பனைக்கு அனுமதியில்லை. 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் இதைக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு-கேரளா மாநில எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச்சாவடி வழியாக கோவை மாவட்டத்துக்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கொரோனா இன்மை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவணைகள்) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்து இருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் இல்லையென்றால், சோதனைச்சாவடிகளிலேயே ரேண்டம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.