சென்னை
தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அமலாகிறது.
தமிழகத்தில் ஓமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி மாதம் தொடக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்து இருப்பதால் மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இன்று முதல் இந்த புதிய தளர்வுகள் இன்று அமலுக்கு வருகிறது. ஏற்கனவே திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று முதல் பொருட்காட்சிகள் நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது. ஏற்கனவே வணிக நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்களுக்கும் 50% நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடும் இன்று முதல் தளர்த்தப்படுகிறது.
ஆனால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை மட்டுமே பங்கேற்கலாம் என்ற நடைமுறை அப்படியே தொடர்கிறது. மேலும் அரசியல் பொது கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. இன்று முதல் தமிழகத்தில் இயங்கும் 10 ஆயிரம் மழலையர் பள்ளி, விளையாட்டுப் பள்ளி, கிரீச்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றில் நடத்தப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்பட உள்ளன.