வாரணாசி
இன்று முதல் காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் இந்துக்களின் புனித கோவிலான காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. தினசரி பல்லாயிரக் கணக்கானோர் தரிசனம் செய்யும் இந்த கோவில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டது.
அதன்பிறகு கோவிலில் பூஜைகள் நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது. இதையொட்டி அம்மாநில அரசு புதிய வழிகாட்டு நெறிகளை அமல் படுத்துகிறது.
அவ்வகையில் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு கொரோனா கால கட்டுப்பாடு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ”கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் பெற வேண்டும். அனைத்து பக்தர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள சிவபெருமானுக்கு நீரால் மட்டுமே ஆராதனை செய்ய வேண்டும்” எப நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.