டில்லி

ன்று முதல் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்குகிறது.

உலகெங்கும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.  இதையொட்டி பல நாடுகளில் பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன.  அவ்வகையில் இந்தியாவில் இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகின்றன.

கொரோனா தடுப்பூசி முதல் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டோர் தொற்று தீவிரமாகுதல் மற்றும்  உயிரிழப்பில் இருந்து காப்பாற்றப்படுகின்றனர்.  இந்த தடுப்பூசியின் வீரியம் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு குறையத் தொடங்கும்.  இதனால் முதியோர் மற்றும் இணை நோய் உள்ளவர்களை உருமாறிய வகை கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது.  எனவே அவர்களைக் காக்க மூன்றாம் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்தியாவில் இன்று முதல் முன் களப்பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள், இணை நோய் உள்ளோர் மற்றும் 60 வயதைத் தாண்டியோர் ஆகியோருக்கு மூன்றாம் டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது.   மூன்றாம் டோஸ் தடுப்பூசி போட கோரி இணைய தளம் வாயிலாக தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.   நேரடியாகத் தகுந்த அடையாள சான்றுடன் சென்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இந்த பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ள இரண்டாம் டோஸ் போட்ட தேதியில் இருந்து 9 மாதங்கள் அல்லது 19 வாரங்கள் முடிந்திருக்க வேண்டும்.  ஏற்கனவே இரண்டு டோஸ் போடப்பட்ட அதே மருந்துதான் மூன்றாம் டோஸாக போடப்படும்.  பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள ஆதார் அட்டை அவசியம் ஆகும்.   ஆதார் இல்லாதோர் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் ஆகியவற்றை அளிக்கலாம்.